செய்திகள்
ஜெயில்

நிதி நிறுவன அதிபர் அடித்து கொலை: கள்ளக்காதலனுடன் கைதான மனைவி சேலம் ஜெயிலில் அடைப்பு

Published On 2021-10-12 10:53 GMT   |   Update On 2021-10-12 10:53 GMT
சேலம் மாவட்டம் தேவூர் அருகே நிதி நிறுவன அதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலனுடன் கைதான மனைவியை போலீசார் சிறையில் அடைத்தனர்.
சங்ககிரி:

சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தயானந்தன். (வயது 31). இவருக்கும், அவருடைய தாய்மாமா மகள் சேலத்தை சேர்ந்த அன்னபிரியா (21) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் படுக்கை அறையில் தயானந்தன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

தயானந்தன் சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தின் மூலம் அவர், பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து இருந்தார். இதனால் வட்டிக்கு பணம் கொடுக்க அவர்கள் தயானந்தன் வீட்டிற்கு வருவர்.

இந்த நிலையில் தயானந்தன் உறவினர் சீரங்கம்மாள் என்பவரிடம் தண்ணிதாசனூர் பகுதியை சேர்ந்த சின்னபையன் மகன் முகேஷ் என்கிற முருகன் (21) வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.

முகேசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. டிப்ளமோ எலக்ட்ரீக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள இவர் இதுபோல் நிறைய பேரிடம் பணம் வட்டிக்கு வாங்கிக்கொண்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வந்தார்.

இதை அறிந்த சீரங்கம்மாள், தன்னிடம் வாங்கிய பணத்திற்கான வட்டியை தயானந்தனிடம் கொடுக்கும்படி முகேஷிடம் கூறி உள்ளார். இதனால் முகேஷ் தயானந்தன் வீட்டுக்கு வட்டி பணம் கொடுக்க அடிக்கடி வருவார்.

அப்போது முகேசுடன் அன்னபிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் ஒரே வயது என்பதால், நண்பர்களாக பழகினர். முதலில் சாதாரணமாக பழகிய இருவரும் நாளடைவில் நெருக்கதை ஏற்படுத்தி கொண்டனர். அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இதனால் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகேசும், அன்னபிரியாவும் உல்லாசமாக இருந்தனர்.

இதை அறிந்த தயானந்தன், 2 பேரையும் கண்டித்தார். மேலும் அன்னபிரியா வைத்திருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டார். இதனால் எந்தவொரு இடையூறும் இல்லாமல் கள்ளக்காதலன் முகேசுடன் வாழ விருப்பிய அன்னபிரியா, தனது கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இது பற்றி கள்ளக்காதலன் முகேசிடம் தெரிவித்தார். அவர் கூறிய திட்டத்தின்படி, அன்னபிரியா வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களை இயங்க விடாமல் ஆப் செய்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அன்னபிரியா, தயானந்தனுக்கு நிலவேம்பு கசாயத்துடன் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். அதை குடித்த தயானந்தன் சிறிது நேரத்திலேயே தூங்கினார்.

உடனே அன்னபிரியா, தனது கள்ளக்காதலனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவித்தார். வீட்டிற்கு வந்த முகேஷ், தூங்கி கொண்டிருந்த தயானந்தனனை மரக்கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை செய்தார். பின்னர் கட்டிலில் இருந்து உடலை தூக்கி கீழே போட்டு விட்டு முகேஷ் அங்கிருந்து சென்று விட்டார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, அன்னபிரியா மற்றும் கள்ளக்காதலன் முகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இருவருக்கும் கொரோனா இல்லை என உறுதியானது. இதனை தொடர்ந்து இன்று காலை 2 பேரையும் சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண்.1-ல் நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபத்தி, அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்படி போலீசார், முகேசை ஜெயிலில் அடைத்தனர். இதில் அன்னபிரியாவை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே தயானந்தன் கொலையில் மேலும் சிலர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களும் சிக்குவார்கள் என தெரிகிறது.
Tags:    

Similar News