செய்திகள்
அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற காட்சி.

12 பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் - திருப்பூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

Published On 2021-10-12 07:56 GMT   |   Update On 2021-10-12 10:01 GMT
14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 7 வார்டு உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
அவினாசி:

திருப்பூர் மாவட்டத்தில் 12 பதவிகளுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 68.47 சதவீத வாக்குகள் பதிவாகின.

காங்கயம் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சியின் 10-வது வார்டு உறுப்பினர், தாராபுரம் ஒன்றியத்தில் 12-வது வார்டு உறுப்பினர், அவிநாசி ஒன்றியத்தில் கருவலூர் ஊராட்சி தலைவர், மூலனூர் ஒன்றியத்தில் எரிசினம்பாளையம் ஊராட்சி தலைவர், உடுமலை ஒன்றியத்தில் எஸ்.வேலூர் ஊராட்சி தலைவர் என 5 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது

மேலும் 14 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 7 வார்டு உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மீதமுள்ள 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 39,079, பெண் வாக்காளர்கள் 41,509,  திருநங்கைகள் 4 பேர் என மொத்தம் 80,592 பேர்  வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.  

இதில் ஆண் வாக்காளர்கள் 27,452 பேரும், பெண் வாக்காளர்கள் 27,730 பேரும்,  திருநங்கை ஒருவர் என மொத்தம் 55,183 வாக்குகள் பதிவாகின. இதில் ஆண்கள் 70.24 சதவீதம் பேரும், பெண்கள் 66.8 சதவீதம் பேரும் வாக்களித்தனர். இதன் மொத்த சராசரி 68.47 சதவீதம் .

இந்தநிலையில் இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிக்கு வாக்கு எண்ணிக்கை நத்தக்காடையூர் அருகே உள்ள ஈரோடு பில்டர்ஸ் என்ஜினீரியங் கல்லூரியிலும், தாராபுரம் ஒன்றியத்திற்கு தாராபுரத்தில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 

உடுமலை, அவனாசி, மூலனூர், குடிமங்கலம், பல்லடம், ஊத்துக்குளி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
Tags:    

Similar News