செய்திகள்
ராமதாஸ்

நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க அவசர திட்டம் தேவை- ராமதாஸ் அறிக்கை

Published On 2021-10-12 07:18 GMT   |   Update On 2021-10-12 07:18 GMT
தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், தமிழ்நாடு மின் வாரியமும் உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு அபாயக் கட்டத்தை எட்டிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன.

மின்னுற்பத்தி நிலையங்களில் போதிய அளவு நிலக்கரி இருப்பதாகவும், கவலைப்பட எதுவுமில்லை என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தாலும் கூட, மத்திய மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்களை அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியிருப்பதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியும். இது மிகவும் கவலையளிக்கும் வி‌ஷயமாகும்.

தமிழ்நாட்டில் 2.40 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், 60,000 டன் நிலக்கரி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர், அதனால் தமிழகத்தில் ஒரு வினாடி கூட மின்வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் விளக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தாலும் கூட, கள நிலைமையை கருத்தில் கொண்டு, நிலக்கரித் தட்டுப்பாடோ, அதனால் மின்சாரத் தட்டுப்பாடோ ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்கான திட்டத்தை வகுத்து தமிழக அரசு தயாராக இருக்க வேண்டும்.

தனியாரிடம் இருந்து சராசரியாக 4000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்சாரத்தை வாங்கிக்கொண்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது 1500 மெகா வாட்டுக்கும் குறைவான மின்சாரத்தையே கொள்முதல் செய்கிறது.

அதனால் ஏற்படும் பற்றாக்குறையை காற்றாலை மின்சாரம் தான் ஈடு செய்கிறது. வழக்கமாக காற்றாலை மின்னுற்பத்தி அக்டோபர் மாதத் தொடக்கத்தில் குறைந்து விடும். ஆனால், நல்வாய்ப்பாக காற்றாலை மின்சாரம் இப்போதும் அதிகமாக கிடைக்கிறது. நேற்று கூட 6 கோடி யூனிட் காற்றாலை மின்சாரம் கிடைத்துள்ளது. இதே நிலை எப்போதும் நீடிக்காது.

ஒருவேளை அடுத்த சில நாட்களில் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்தாலும், தனியார் நிறுவனங்கள் வழங்கும் மின்சாரம் குறைந்தாலும் தமிழகம் மின்தட்டுப்பாட்டை சந்திக்கும் ஆபத்துள்ளது.

எனவே, கள நிலைமையை உணர்ந்து கொண்டு, மின்பற்றாக்குறை ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கான அவசர காலத் திட்டத்தை தயாரித்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், தமிழ்நாடு மின் வாரியமும் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News