செய்திகள்
வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவிலில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மரக்கன்றுகளை நட்டு வைத்த காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 50 கோவில்களில் திருப்பணி செய்ய நடவடிக்கை-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

Published On 2021-10-10 12:09 GMT   |   Update On 2021-10-10 12:09 GMT
கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின் போது 112 அறிவிப்புகள் தமிழ்நாடு முதல்வர் ஆலோசனையின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் அறிவிக்கப்பட்டது.
வெள்ளகோவில் :

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவிலில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தாராபுரம் சப்-கலெக்டர்  ஆனந்த்மோகன் தலைமையில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்  கீழ் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் வெள்ளகோவில்  வீரக்குமாரசுவாமி கோவிலில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில்  உள்ள அனைத்து கோவில்களிலும்   3000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டு இதுவரை சுமார்  1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில்  இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்  போது 112 அறிவிப்புகள் தமிழ்நாடு முதல்வர் ஆலோசனையின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் தூரம்பாடி குலமாணிக்கீஸ்வரர் கோவிலில் ரூ.85 லட்சம் செலவில் பக்தர்கள் தங்கும் மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முத்தூர் சோழீஸ்வரர்  கோவிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கன்னிவாடி வஞ்சியம்மன் கோவிலில் ரூ.27 லட்சம் செலவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில், அலகுமலை முத்துகுமாரசாமி கோவில் மற்றும் கொங்கனகிரி கந்தபெருமாள்  கோவில்களில் நந்தவனம் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள கோவில்கள் மற்றும் கிராமப்புற கோவில்கள் திருப்பணிக்கான தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2லட்சமாக உயர்த்தப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் சுமார்  50 கோவில்களில் நடப்பாண்டில் திருப்பணி செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு ஓய்வூதியம்  ரூ.3ஆயிரத்தில் இருந்து ரூ.4ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது-.
ஒரு கால பூஜை திட்டத்தில் உள்ள கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு  மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. முடிக் காணிக்கை கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சென்னை, திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் 4 கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகள் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கோவில்களில் பணிபுரியும்    1500 தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்  நடராஜன், உதவி ஆணையர் வெங்கடேஷ், காங்கேயம் தாசில்தார் சிவகாமி, செயல் அலுவலர் ராமநாதன், கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News