செய்திகள்
தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 5வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்

Published On 2021-10-10 11:13 GMT   |   Update On 2021-10-10 12:10 GMT
தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 19 லட்சத்து 74 ஆயிரத்து 916 'டோஸ்' கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் 15 லட்சத்து 55 ஆயிரத்து 943 பேர், முதல் 'டோஸ்' தடுப்பூசியும், நான்கு லட்சத்து 18 ஆயிரத்து 973 பேர் இரண்டாவது, 'டோஸ்' தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

கடந்த 4 ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த முகாம் வாயிலாக 3 லட்சத்து 72 ஆயிரத்து  546 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடந்த சில மாதங்களாக தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வந்தது. மக்களின் சிரமத்தை போக்க  ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு முகாம் நடத்தி வீட்டின் அருகே தடுப்பூசி போட வழிவகை செய்யப்பட்டது.

அதன்படி இன்று 5 - வது கட்டமாக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

இதையடுத்து மாவட்டம் முழுவதும்  பள்ளிகள், அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில், கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்  நடைபெற்றது. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

முன்னதாக கொரோனா தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்களும், முதல் 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி காத்திருப்போரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

தடுப்பு குழுவினர் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களை முகாமுக்கு அழைத்து சென்று தடுப்பூசி போட வைத்தனர். 100 சதவீத இலக்கை அடையும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், வெள்ளகோவில், காங்கயம், உடுமலை, பல்லடம் உள்பட பல்வேறு இடங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
Tags:    

Similar News