செய்திகள்
கோப்புபடம்

உள்ளாட்சி தேர்தலில் மோதல்: போலீசாரை தாக்கிய பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேர் ஜெயிலில் அடைப்பு

Published On 2021-10-10 08:01 GMT   |   Update On 2021-10-10 08:01 GMT
சேலம் அருகே உள்ளாட்சி தேர்தலில் போலீசாரை தாக்கிய பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

சேலம்:

சேலம் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 79.28 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலையொட்டி ஒவ்வொரு மையங்களிலும் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஓமலூர் அருகே தொளசம்பட்டி ரெட்டிப்பட்டி காட்டுவளவு நடுநிலைப்பள்ளி ஓட்டுச் சாவடியில் ஓமலூர் மானாத்தாள் பகுதியை சேர்ந்த மேட்டூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் வினோத்குமார் (வயது 34) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

அப்போது கோல்காரனூர் பகுதியை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் மணிகண்டன் (26), ஜெகநாதன் (42), தங்கராஜ்(50) ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு நின்று பேசிக்கொண்டிருந்தனர். வினோத்குமார், அவர்களிடம் ஓட்டுச்சாவடி பகுதி தடைசெய்யப்பட்ட பகுதி. ஆகவே இங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதில் 2 தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மணிகண்டன் திடீரென போலீஸ்காரர் வினோத்குமார் சட்டையை பிடித்து தகராறு செய்தார். அவருடன் சேர்ந்து குடிபோதையில் தங்கராஜ், ஜெகநாதன் ஆகியோரும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார், மணிகண்டன், ஜெகநாதன் ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். தங்கராஜ் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டன், ஜெகநாதனை கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய தங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News