செய்திகள்
தடுப்பூசி

தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம்

Published On 2021-10-09 20:37 GMT   |   Update On 2021-10-10 02:53 GMT
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மீண்டும் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 12-ம் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடந்த 19-ம் தேதி நடந்த 2-வது தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும், 26-ம் தேதி நடந்த 3-வது முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 

4-வது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 3-ம் தேதி நடந்தது. இந்த முகாம்கள் மூலம் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில் தமிழகத்தில் 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.



இந்நிலையில், தமிழகம் முழுவதும் 5-வது மெகா தடுப்பூசி முகாம் அக்டோபர் 10-ம் தேதி (இன்று) நடத்தப்பட உள்ளது. இதில் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டு 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.

தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஒழிக்கும் வகையில் தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு  தங்கள் பங்கை செலுத்திட தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News