செய்திகள்
கொரோனா வைரஸ்.

திருப்பூர் மாவட்டத்தில் கட்டுக்குள் வரும் கொரோனா - நாளை 1.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

Published On 2021-10-09 08:51 GMT   |   Update On 2021-10-09 08:51 GMT
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், எவ்வித இடையூறுமின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு வட்டார வாரியாக வட்டார பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 70 முதல் 75 என்ற நிலையில் தொடர்கிறது. நேற்று முன்தினம் வரை 91 ஆயிரம் பேர் தொற்றில் இருந்து நலம் பெற்றுள்ளனர். 

திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 900த்தை கடந்திருந்தது. 

அக்டோபர் தொடக்கம் முதல் ஒரு வாரமாக ஒரு நாள் பாதிப்பு 80 - க்கும் குறைவாக தொடர்வதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 800 க்கு கீழ் சென்றுள்ளது. நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் 835 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தற்போது விடுபட்டுள்ள தகுதியுடைய 18 வயதுக்கு மேற்பட்ட, அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பொருட்டு நாளை 10 - ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டம் முழுவதும் 5-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. 

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும், எவ்வித இடையூறுமின்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு வட்டார வாரியாக வட்டார பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இப்பணிக்காக தேவையான அலுவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ஈடுபட உள்ளனர். ஆகவே பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, திருப்பூர் மாவட்டம் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டமாக மாற ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 15 லட்சத்து 55 ஆயிரத்து 2 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 78 சதவீதம் ஆகும். 4 லட்சத்து 9 ஆயிரத்து 346 நபர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

மாவட்டம் முழுவதும் இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 35 சதவீதம் ஆகும். மேலும் 4 லட்சத்து 40 ஆயிரத்து 298 நபர்களுக்கு முதல் தவணையும், 1 லட்சத்து 73 ஆயிரத்து 585 நபர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. இந்த 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் கட்டாயம் செலுத்த வேண்டும் என கலெக்டர் வினீத் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பொதுமக்களுக்கு மாநகராட்சி  சார்பில் தண்டோரா மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில் ரெயில் நிலையம், பஸ்  நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முகாம் நடக்கிறது.

தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி கொள்ளுமாறு  மாநகராட்சி சார்பில், தண்டோரா மூலம் வீதி, வீதியாக சென்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. 
Tags:    

Similar News