செய்திகள்
கோப்புபடம்

காரணம்பேட்டையில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை - இளைஞர்கள் மனு

Published On 2021-10-09 07:02 GMT   |   Update On 2021-10-09 07:02 GMT
சாலையை கடக்க நினைக்கும் பொதுமக்கள் பலர் விபத்தில் சிக்குகின்றனர். காரணம்பேட்டை - சங்கோதிபாளையம் சந்திப்பில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன.
திருப்பூர்:

விபத்துகளை தடுக்க  காரணம்பேட்டை மீது கவனம் செலுத்த வேண்டும் என இளைஞர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுகுறித்து திருப்பூர் காரணம்பேட்டை ‘இணைக்கும் கரங்கள்’ இளைஞர் அமைப்பினர் கலெக்டர் மற்றும் பல்லடம் டி.எஸ்.பி., ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை - திருச்சி ரோடு காரணம்பேட்டை பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இருப்பினும், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.  சாலையை கடக்க நினைக்கும் பொதுமக்கள் பலர் விபத்தில் சிக்குகின்றனர்.

காரணம்பேட்டை - சங்கோதிபாளையம் சந்திப்பில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் இணைகின்றன. இப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் எச்சரிக்கை விளக்கு அமைக்க வேண்டும். காரணம்பேட்டை சிக்னலில் வாகன ஓட்டிகள் பலர் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வதாலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

சிக்னலில் போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். நால்ரோடு சிக்னலில் ரோடு மிகவும் சேதமடைந்துள்ளது. எனவே விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
Tags:    

Similar News