செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது

Published On 2021-10-08 06:03 GMT   |   Update On 2021-10-08 06:03 GMT
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 500 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விராலி மஞ்சள், கடல் அட்டை உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட பொருட்களும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும், அடிக்கடி கடல் வழியாக படகுகள் மூலம் கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர பகுதியில் உள்ள உள்ளூர் போலீசார், கியூபிரிவு உள்ளிட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தருவைகுளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கியூபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வில்லியம் பென்ஜமின், வேல்ராஜ், செந்தில்குமார் தலைமையில் ஏட்டுகள் இருதயராஜ், ராமர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது ஒரு படகில் சிலர் மூட்டை மூட்டையாக பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அதனை பார்த்தபோது அதில் 500 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1½ கோடி ஆகும்.

விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 25), தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த லெனிஸ்டன் (48), ஜெய்ஸ்டன் (37), அந்தோணி பிச்சை (42) என்பதும், அவர்கள் கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? கடத்தலில் தொடர்புடையவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுகம் மற்றும் ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளதால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதும், இங்கே விற்பனை செய்யப்படுவதும் அதிகளவில் எளிதாக நடந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் சமீபகாலமாக மாநகரில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், விற்பனையை அதிகரிக்க மாணவர்களிடையே அவர்கள் 10 பொட்டலங்கள் வாங்கினால் ஒரு பொட்டலம் இலவசம் என்ற வகையில் வழங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீசார், கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டும், தனிப்படைகள் அமைந்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News