செய்திகள்
நாரணாபுரம் வாக்குச்சாவடி முன்பு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததை படத்தில் காணலாம்.

ஆலங்குளம் அருகே வாக்குச்சாவடியில் ஊழியர்களை சிறைபிடித்த கிராம மக்கள்

Published On 2021-10-07 13:47 GMT   |   Update On 2021-10-07 13:47 GMT
ஆலங்குளம் அருகே வாக்குச்சாவடியில் ஊழியர்களை சிறைபிடித்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலங்குளம்:

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் நாரணாபுரம் பஞ்சாயத்தில் நேற்று தேர்தல் நடந்தது. இங்கு பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மருதப்பபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும், நாரணாபுரத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் போட்டியிட்டனர். நேற்று மருதப்பபுரம், நாரணாபுரம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. மாலையில் மருதப்பபுரம் பெண் வேட்பாளரின் கணவர் காரில் நாரணாபுரத்துக்கு சென்றார். அப்போது அவரது காரின் மீது மர்ம நபர் கல்வீசியதில் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதனை அறிந்த மருதப்பபுரம் கிராம மக்கள் தங்களது ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டுகளாக இருந்த நாரணாபுரத்தைச் சேர்ந்த 6 பேரை சிறைபிடித்தனர் இதனால் ஆத்திரம் அடைந்த நாரணாபுரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டுகளாக இருந்த மருதப்பபுரத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் வாக்குச்சாவடி ஊழியர்களையும் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

உடனே ெநல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து இரு கிராமங்களிலும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவித்தனர். இதற்கிடையே மருதப்பபுரம் வாக்குச்சாவடியில் நாரணாபுரத்தைச் சேர்ந்த பூத் ஏஜெண்டுகள் தாக்கப்பட்டதாக கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாரணாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நாரணாபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பெட்டியையும் எடுத்து செல்ல விடமாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவங்களில் காயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News