செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்

கோவில் கோவிலாக சென்றாலும் பாவம் தீராது- தி.மு.க. அரசை சாடும் பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2021-10-07 10:39 GMT   |   Update On 2021-10-07 10:39 GMT
இந்துக்களின் வழிபாட்டை தடுப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல என்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
மதுரை:

வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அடைக்கப்படும் இந்து மத தலங்களை திறக்க வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர் மேற்கு, விருதுநகர் கிழக்கு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

வாரத்தின் வெள்ளிக்கிழமை என்பது இந்துக்களின் புனித நாள். இதே போல சனி, ஞாயிறு ஓய்வு நாட்களாகும். அப்போதுதான் இந்துக்கள் பெரும்பாலும் ஆலயத்துக்கு சென்று வழிபடுவார்கள். இது தொன்றுதொட்டு பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்துக்களின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. அரசு பறித்து வருகிறது. கோவில் வழிபாடு என்பது மனிதனின் உரிமை ஆகும். அது காக்கப்பட வேண்டும். இந்துக்கள் கஷ்டம் என்றால் அதிகபட்சமாக கோவிலுக்குத்தான் செல்வார்கள். அதனை தி.மு.க. அரசு இன்றைக்கு தடுத்து வருகிறது.

அப்படி என்றால் இது நிச்சயமாக புறந்தள்ளப்படவேண்டிய அரசு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்துக்களின் குடும்ப, பாரம்பரிய வழிபாட்டை இந்து விரோத தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தி வருகிறது.

கோவில்களை திறந்தால் நோய் பரவிவிடும் என்று தி.மு.க. அரசு சொல்கிறது. ஆனால் தி.மு.க.விடம்தான் நோய் பாதிப்பு உள்ளது. எனவேதான் அந்த அமைப்பு இந்துக்களுக்கு எதிராக புனித நிகழ்வுகளை தடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டுக்கு எந்த தடையும் இல்லை. இந்துக்களின் வழிபாட்டுக்கு தடை விதித்தது போல டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை, ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு ஆகியவற்றை கொண்டாடக்கூடாது என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க முடியுமா?

தி.மு.க. அரசுக்கு சனி பிடித்து இருக்கிறது. நீங்கள் கோவில் கோவிலாக போனாலும் உங்களை பாவம் விடாது. தி.மு.க. அரசில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளனர். நீங்கள் செய்த பாவத்தை கோவில் கோவிலாக சென்று கழுவி வருகிறீர்கள்.



இந்துக்களின் வழிபாட்டை தடுப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது அல்ல. இதுதான் மதசார்பின்மை என்றால் அந்த மதசார்பின்மையை தீயிட்டு கொளுத்த வேண்டும். கோவில் வழிபாடு என்பது என் உரிமை அல்ல, மீனாட்சி தாயின் உரிமை.

நான் அம்மனை சென்று வழிபடும் உரிமை தடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த அரசுக்கு எதிராக போராடும் வல்லமை, தைரியம், வலிமையை தரவேண்டும் என்று மீனாட்சி அம்மனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் இந்து ஆலயங்களை வாரம் முழுவதும் திறக்க உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் டாக்டர் சரவணன் உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பா.ஜனதாவினர் திருமலை நாயக்கர் மன்னர் வேடத்திலும், கள்ளர் வேடத்திலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


Tags:    

Similar News