செய்திகள்
ராமதாஸ்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை- ராமதாஸ் கோரிக்கை

Published On 2021-10-07 08:39 GMT   |   Update On 2021-10-07 08:39 GMT
தமிழகத்திற்கு தேவையான உரங்களை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பாடு காரணமாக உரங்களின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளன. உரத்தட்டுப்பாடு மற்றும் உர விலை உயர்வால் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குறுவை சாகுபடி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் சம்பா நடவு தொடங்கியுள்ள நிலையில், உரத்தட்டுப்பாடு காரணமாக நடவுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சந்தையில் இந்த இரு வகை உரங்கள் கிடைக்கவில்லை. பல இடங்களில் யூரியா மூட்டைக்கு ரூ.100 வரையிலும், டி.ஏ.பி. மூட்டைக்கு ரூ.400 வரையிலும் விலை உயர்ந்துள்ளது.

பல இடங்களில் நுண்ணூட்டச் சத்து உரங்கள், கலைக்கொல்லிகள் ஆகியவற்றை வாங்கினால் தான் இந்த இரு வகை உரங்களும் வழங்கப்படும் என்று உர வணிகர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால் ஏழை விவசாயிகளால் சம்பா சாகுபடியை தொடங்க முடியவில்லை.

குறுவை நெல் சாகுபடி குறைந்த பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டது. சம்பா சாகுபடி அதை விட சுமார் 5 மடங்கு பரப்பளவில் செய்யப்படும். அதற்கேற்ற அளவில் உரங்களின் தேவை அதிகரிக்கும். யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் ஆகிய உரங்ளை அதிக அளவில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுக்கு தமிழக வேளாண்துறை அமைச்சர் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அதற்கு இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை.

இத்தகைய சூழலில் வேளாண்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் குழுவை தில்லிக்கு அனுப்பி தமிழகத்திற்கு தேவையான உரங்களை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும். கூடுதல் விலைக்கு யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News