செய்திகள்
ரெயில் பாதையில் மண்சரிந்தும், பாறைகள் விழுந்து கிடப்பதையும் காணலாம்

மலை ரெயில் பாதையில் மண் சரிவு: மேட்டுப்பாளையம்-குன்னூர் ரெயில் நிறுத்தம்

Published On 2021-10-07 07:15 GMT   |   Update On 2021-10-07 07:15 GMT
மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலை ரெயில் நிறுத்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. காடுகளை கடந்து செல்வதால் இந்த ரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

கடந்த சில நாட்களாகவே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் கில்குரோவ், அடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே பெரிய பெரிய பாறைகள் மலைகளில் இருந்து உருண்டு வந்து மலைரெயில் பாதையில் விழுந்தன. மேலும் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளம் தெரியாதபடி மூடியது. இதனால் தண்டவாளத்தில் உள்ள் பல்சக்கரங்கள் சேதமடைந்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே துறையினர் ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஊழியர்கள் உதவியுடன் பாறைகளை வெட்டி அகற்றும் பணியிலும், மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இன்று காலை 7.10 மணிக்கு வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது. ரெயில் கல்லார் ரெயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றி விட்டு புறப்பட தயாரானபோது மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட தகவல் தெரியவந்தது. இதையடுத்து மேற்கொண்டு ரெயில் ஊட்டி செல்ல முடியாததை அடுத்து மீண்டும் ரெயில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்தது. அங்கிருந்து பயணிகள் பஸ்கள் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதை அடுத்து இன்று ஒரு நாள் மட்டும் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான மலை ரெயில் நிறுத்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News