செய்திகள்
பாஜக

வெள்ளி, சனி, ஞாயிறு தரிசன தடையை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-07 06:09 GMT   |   Update On 2021-10-07 07:55 GMT
வெள்ளி, சனி, ஞாயிறு தரிசன தடையை நீக்க கோரி திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டை காரணம் காட்டி வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில்களுக்கு செல்வதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

பள்ளி, கல்லூரி, திரை அரங்குகள், கடற்கரை, மால்கள், கூடங்கள், பஸ் போக்குவரத்து என அனைத்தும் சுமூகமாக நடக்கும்போது வழிபாட்டிற்கு மட்டும் தி.மு.க. அரசு தடை விதிப்பது ஏன்? நாட்டில் அனைத்து நடவடிக்கைகளும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டன. மக்கள் பொதுவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் கொரோனா அச்சமின்றி அதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதை வேடிக்கை பார்க்க முடிகிறது.

தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதி கடவுளை வழிபடுவது, அதை தடுக்க நினைப்பது மதியா இல்லை, சதியா என மக்கள் முடிவு செய்யட்டும்.

எனவே தான் மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக கடவுள் சன்னதிகளில் இந்த அறப்போராட்டத்தை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி.செல்வம் முன்னிலை வகித்தார். சென்னை கிழக்கு தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மாநில தலைவர் அண்ணாமலை கண்டன ஆர்ப்பாட்ட உரையாற்றினார்.

தமிழகம் முழுவதும் பா.ஜனதாவினரும், பக்தர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போர்க்கோலம் பூண்டனர்.

மாநிலம் முழுவதும் புகழ்பெற்ற 12 திருக்கோவில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோவில்களை திறக்க வலியுறுத்தி ஆவேசமாக கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற கோவில்கள் விபரம் வருமாறு:-

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம் நடத்தினார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கனகராஜ் தலைமையில் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய சிறுபான்மை அணி செயலர் சையத் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் நகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் பேராசிரியர் ராம சீனிவாசன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

தஞ்சை பெரிய கோவிலில் மாவட்ட தலைவர் இளங்கோ தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

கோவை கோனியம்மன் கோவில் நகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மாநில பொதுச்செயலாளர் செல்வகுமார் கலந்துகொண்டனர்.

திருவண்ணாமலையில் மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மாநில துணைத்தலைவர் நரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாநில துணைத் தலைவர் கனக சபாபதி மாநில முன்னாள் எம்.பி. கார்வேந்தன் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவிலில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட பிரபாரி, தடா பெரியசாமி, சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், டாக்டர் சரஸ்வதி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News