செய்திகள்
குமரன் சிலைக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்திய காட்சி.

118வது பிறந்தநாள் - திருப்பூர் குமரன் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

Published On 2021-10-04 12:40 GMT   |   Update On 2021-10-04 12:40 GMT
திருப்பூர் நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
திருப்பூர்:

சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரனின் 118 - வது பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.  

இதையொட்டி திருப்பூர் நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  

காங்கிரஸ் சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் ஹரி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. 
  
மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் தியாகி திருப்பூர் குமரன் அறக்கட்டளை நிர்வாகிகள் என ஏராளமானோர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியின் போது அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 75-வது சுதந்திர வைர விழா ஆண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. 
 
ஏராளமான சுதந்திர வீரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி அவர்களுக்கு உண்டான மரியாதையை தி.மு.க. அரசு செய்து வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் குமரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு உள்ளது. 

திருப்பூர் குமரனின் நினைவாக நிழற்குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.  
Tags:    

Similar News