செய்திகள்
சஸ்பெண்டு

முறைகேடு அம்பலம்- அம்பை அயன்சிங்கம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர், செயலாளர் ‘சஸ்பெண்டு’

Published On 2021-10-02 10:22 GMT   |   Update On 2021-10-02 10:22 GMT
அயன்சிங்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பூதப்பாண்டியை 6 மாதத்திற்கு ‘சஸ்பெண்டு’ செய்து நெல்லை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி உத்தரவிட்டார்.
நெல்லை:

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் அடகு வைத்துள்ள 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்வதற்காக ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் நடைபெற்ற ஆய்வின்போது அங்குள்ள கூட்டுறவு வேளாண்மை வங்கியில் ரூ.3 கோடி அளவில் மோசடி நடைபெற்றது தெரிய வந்தது.

இதேபோல மேலும் சில இடங்களிலும் முறைகேடு நடந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டுறவு சங்கங்கள் நகைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அப்பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் 25 கிராம் நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். காலக்கெடு முடிந்தும் நகையை மீட்க இசக்கிமுத்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனை தொடர்ந்து அந்த நகை ஏலத்திற்கு சென்றது. ஆனால் அயன்சிங்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பூதப்பாண்டி, சங்க செயலாளர் சுந்தரி ஆகியோர் அந்த நகையை முறைப்படி ஏலம் விடாமல் பதுக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான இசக்கிமுத்து கூட்டுறவுத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் முத்துச்சாமி விசாரணை நடத்தினார். அப்போது நகையை ஏலம் விடாமல் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சங்கத் தலைவர் பூதப்பாண்டியை 6 மாதத்திற்கு ‘சஸ்பெண்டு’ செய்து நெல்லை கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அழகிரி உத்தரவிட்டார்.

இதேபோல் சங்க செயலாளர் சுந்தரியை 3 மாதத்திற்கும் ‘சஸ்பெண்டு’ செய்துள்ளார். ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News