செய்திகள்
ஜி.கே.வாசன்

முதியோரை பாதுகாக்க பள்ளி பருவத்தில் விழிப்புணர்வு- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2021-09-30 10:52 GMT   |   Update On 2021-09-30 10:52 GMT
முதியவர்கள் உடலளவில் தளர்ந்து போனாலும் அவர்களுக்கு மனதளவில் தெம்பு கொடுத்து அவர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுவதன் மூலம் முதியோர்கள் நம்பிக்கை பெற்று நல்வாழ்க்கை வாழ வேண்டும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்கள் குடும்பத்தில் உள்ள வயதான மூத்த உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு உரிய உரிமைகள், சுதந்திரம் ஆகியவை அவர்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும்.

குழந்தைகள் தான் வருங்காலத்தில் முதியோர் என்பதால் சிறு வயது முதலே குழந்தைப் பருவம், மாணவப் பருவம் என அனைத்துப் பருவத்திலும் அவர்களிடம் முதியோருக்கு துணை நிற்க வேண்டிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் முதியோர் நலன் காக்க கற்றுக்கொடுக்க வேண்டும். சமூக நலன் காப்பதில் முதியோர்கள் தங்களுக்குள்ள பங்களிப்பை மேற்கொள்ளும்போது எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது.

இந்த நவீன காலத்தில் அறிவியல் ரீதியாக உலகம் பல்வேறு துறைகளில் வளர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தாலும் முதியோர் நலன் காப்பதில் உள்ள பிரச்சனைகள் இன்னும் தீர்ந்த பாடில்லை. முதியோர் காப்பகம், அனாதை மையங்கள் ஆகியவை எண்ணிக்கையில் அதிகரிப்பது வேதனையான ஒன்று.

தன் பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த பெற்றோர், பிற்காலத்தில் ஆதரவற்ற நிலையில் முதியோர் இல்லத்திலும், அனாதை மையங்களிலும் வாழும் நிலை ஏற்படக்கூடாது. முதியவர்கள் உடலளவில் தளர்ந்து போனாலும் அவர்களுக்கு மனதளவில் தெம்பு கொடுத்து அவர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

மத்திய-மாநில அரசுகள் முதியோர் நலன் காக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News