செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2021-09-27 04:52 GMT   |   Update On 2021-09-27 04:52 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல்லுக்கு வருகிறது. ஒகேனக்கல்லில் தற்போது 8 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

6 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஆர்வத்துடன் காலை முதலே சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி மற்றும் இயற்கை அழகுகளை பார்த்து ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 6 ஆயிரத்து 831 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 7 ஆயிரத்து 51 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 7 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 800 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 73.58 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 73.49 அடியானது.

Tags:    

Similar News