செய்திகள்
கைது

தமிழகம் முழுவதும் 3,325 ரவுடிகள் கைது

Published On 2021-09-27 02:58 GMT   |   Update On 2021-09-27 02:58 GMT
தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகம் முழுவதும் பழிக்குப்பழி வாங்க ரவுடிகள் மோதிக்கொண்டு தலையை துண்டித்து கொலை செய்யப்படும் கலாசாரம் அதிகரித்துள்ளது. கூலிப்படையினரின் அட்டகாசமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதன்பேரில் கடந்த 23-ந் தேதி இரவு முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடியாக ரவுடிகள் வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 52 மணி நேரம் நடந்த இந்த வேட்டையில் 21 ஆயிரத்து 592 பழைய குற்றவாளிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர்களில் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 294 பேர் வழக்குகள் சம்பந்தமாக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 972 பேர் இதில் அடங்குவார்கள்.

கைதான ரவுடிகளிடம் இருந்து 7 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் அரிவாள்கள், கத்திகள் உள்பட மொத்தம் 1117 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News