செய்திகள்
கோப்புபடம்.

தொழிலாளர்கள் கிடைக்காததால் உடுமலை பகுதியில் விவசாய பணிகள் முடங்கும் அபாயம்

Published On 2021-09-26 08:31 GMT   |   Update On 2021-09-26 08:31 GMT
கிணற்றுப்பாசனம் இல்லாமல் அணை பாசனத்திட்டங்களை மட்டும் ஆதாரமாகக்கொண்டு சாகுபடி செய்யும் விளைநிலங்கள் ஏராளமாக உள்ளன.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம்  உடுமலை சுற்றுப்பகுதியில் பி.ஏ.பி., மற்றும் அமராவதி அணை பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனம் வாயிலாக பல ஆயிரம் ஏக்கரில் விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. 

இதில் கிணற்றுப்பாசனம் இல்லாமல் அணை பாசனத்திட்டங்களை மட்டும் ஆதாரமாகக்கொண்டு சாகுபடி செய்யும் விளைநிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த விளைநிலங்களில் அணையில் இருந்து தண்ணீர் திறந்ததும்  மக்காச்சோளம் உட்பட நடவு பணிகளை மேற்கொள்வது அவசியமாகும். இல்லாவிட்டால் சுற்று நாட்கள் முடிந்து பாசன கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்படும்.

இத்தகைய விளைநிலங்களில் குறித்த நேரத்தில் நடவுப்பணிகளை மேற்கொள்ள  தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். போதிய அளவு தொழிலாளர்கள் கிடைக்காமல் நடவு மட்டுமல்லாது பல்வேறு விவசாயப்பணிகளும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பணியாற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வரப்பு அமைத்தல், தென்னை மரங்களுக்கு வட்டப்பாத்தி உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. 

திட்டத்தில் சிறிய மாறுதல் செய்து நடவு, களையெடுத்தல் உள்ளிட்ட  பணிகளுக்கும் திட்ட தொழிலாளர்களை பயன்படுத்த அரசு அனுமதித்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News