செய்திகள்
தமிழக அரசு

மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகள்- அரசாணை வெளியீடு

Published On 2021-09-25 10:14 GMT   |   Update On 2021-09-25 10:14 GMT
தேர்வில் மாற்றுத் திறனாளிகள் விரும்பினால் அவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டியது அவசியம். தேர்வறைகள், தேர்வு மையங்களில் சாய்தளம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கட்டாயம் அமைக்க வேண்டும்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்து வகையான தேர்வுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் தேர்வு எழுதும் நபர் / வாசிக்கும் நபர் / ஆய்வக உதவியாளர் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் விருப்பத்தின் பேரில் உதவியாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். தேர்வு எழுதும் ஒருவரை உதவியாளராக நியமிக்கும்போது, அவர் வேகமாக தேர்வு எழுதுபவராக இருத்தல் வேண்டும்.

மாநில, மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளின் தேர்வுக்கு உதவிடும் வகையில், எழுதுபவர், வாசிப்பவர், ஆய்வக உதவியாளர் அடங்கிய ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும்.

கமிட்டியில் இருந்து யாரேனும் ஒருவரை சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி தேர்வரே தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். கணினி வழித்தேர்வை எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு, ஒரு நாள் முன்பே அதை சரிபார்த்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக உள்ள ஒருவரையே உதவியாளராக நியமித்தல் வேண்டும்.

வெவ்வேறு மொழிகளில் தேர்வு எழுதினால், ஒன்றுக்கு மேற்பட்ட உதவியாளரை பணியமர்த்திக் கொள்ளலாம்.

தேர்வில் மாற்றுத் திறனாளிகள் விரும்பினால் அவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட வேண்டியது அவசியம். தேர்வறைகள், தேர்வு மையங்களில் சாய்தளம் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கட்டாயம்.

தேர்வின்போது கால்குலேட்டர், பிரெய்லி உபகரணங்களை மாற்றுத்திறனாளிகள் எடுத்து செல்லலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அறையில் தேர்வு நடத்த வேண்டும்.

தேர்வு நடத்தும் அனைத்து அமைப்புகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தேர்வு விதிமுறைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News