செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2021-09-24 06:27 GMT   |   Update On 2021-09-24 07:49 GMT
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் உள்ளிட்டவைகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் (அக்டோபர்) 2-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழையால் காவிரி டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பல மாவட்டங்களில் மிக அதிக அளவு மழை கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் இலங்கை அருகேயும், அந்தமான் அருகேயும் புயல் சின்னம் உருவாகும் சமயங்களில் தமிழகத்தில் மிக அதிகளவில் மழை பெய்யும். சில மாவட்டங்களில் மழையால் சேதங்களும் ஏற்படுவது உண்டு.

இந்த பருவமழையை எதிர்கொள்ள தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது மாடி கூட்டரங்கில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.


தலைமை செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் வருவாய் பேரிடர் துறை, நகராட்சி நிர்வாகம், தீயணைப்புத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த செயலாளர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கடந்த காலங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி, வர்தா, கஜா, நிவர் உள்ளிட்ட புயல்களால் தமிழகத்தில் அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு எடுக்க வேண்டிய பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விவரித்து கூறினார்.

வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் உள்ளிட்டவைகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் நிலை எந்த அளவில் உள்ளது? என்பதையும் கேட்டறிந்த அவர், பருவமழை தொடங்குவதற்கு முன்பே அந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நகரம் மற்றும் கிராமங்களில் குடிநீர், சாலைவசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, பருவ கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், நீர்நிலை உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக் கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மழை காலங்களில் பொதுமக்களை பாதிக்காத வகையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

மரங்கள் சாய்ந்து விழுந்தால், அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த தீயணைப்புத்துறை, வருவாய் துறையினருக்கு தேவையான கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவையென்றால் மாவட்ட நிர்வாகம் கேட்டு பெற வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் கையிருப்பு இருக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்து கூறினார்.

ஒவ்வொரு துறையிலும் மழை காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த அதிகாரிகள் மட்டத்தில் குழு அமைத்து செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

Similar News