செய்திகள்
படகில் கடத்த முயன்ற மஞ்சள் மூட்டைகள்.

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல்

Published On 2021-09-23 05:45 GMT   |   Update On 2021-09-23 05:45 GMT
மஞ்சள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டைகள் உள்ளிட்டவை அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் படையினர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து சென்று வருகின்றனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு படகில் விராலி மஞ்சள்கள் மூட்டை, மூட்டையாக ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி சென்றனர். அதில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் திரேஸ்புரத்தை சேர்ந்த அப்சல் முகமது (வயது 29) என்பது தெரியவந்தது.

மேலும் 2 ஆயிரம் கிலோ மஞ்சளை இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 10 லட்சம் ஆகும்.

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மஞ்சளையும், அதனை கடத்த பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.

இந்த மஞ்சள்கள் எங்கிருந்து கடத்தி செல்லப்படுகிறது? இதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது


Tags:    

Similar News