செய்திகள்
கோப்புபடம்

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-09-20 12:44 GMT   |   Update On 2021-09-20 12:44 GMT
தஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்டத்தில் இலக்கை தாண்டி 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்.
தஞ்சாவூர்:

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் கடந்த வாரம் நடந்தது. 2-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்திலும் 2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முதல் கட்ட முகாமில் 1 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கிராம ஊராட்சி பகுதிகள், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் முகாம்கள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு முகாம் தொடங்கி நடைபெற்றது. பொதுமக்கள் வர, வர தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2-வது கட்ட முகாமில் 35 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது இலக்கை தாண்டி 12 ஆயிரத்து 344 பேருக்கு கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 2-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 782 இடங்களில் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், ஊராட்சி மன்ற தலைவர்களும் அந்தந்த பகுதியில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த பணியில் அங்கன் வாடிகள், பள்ளிகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

முகாமில் 47 ஆயிரத்து 744 பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2-வது கட்ட முகாமில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கூடுதலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது வரை தஞ்சை மாவட்டத்திற்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும் போடப்பட்டு விட்டன. இன்று (திங்கட்கிழமை) மேலும் தடுப்பூசிகள் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News