செய்திகள்
பாமக

அ.தி.மு.க. கூட்டணியில் மீண்டும் பா.ம.க.?

Published On 2021-09-20 08:29 GMT   |   Update On 2021-09-20 10:22 GMT
வார்டு அளவில் இடங்களை பகிர்ந்து கொண்டு அதன் அடிப்படையில் தேர்தலில் நின்றால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என கருதி இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் காஞ்சீபுரம்- செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய புதன்கிழமை கடைசி நாள் ஆகும்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க. தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டது. அதன் அடிப்படையில் 9 மாவட்டங்களில் போட்டியிடும் இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ம.க. தயாரித்து வருகிறது.

இன்று மாலை வேட்பாளர் பட்டியலை பா.ம.க. வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் பா.ம.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி பங்கீடு செய்து கொண்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

வார்டு அளவில் இடங்களை பகிர்ந்து கொண்டு அதன் அடிப்படையில் தேர்தலில் நின்றால் அதிக இடங்களில் வெற்றி பெற முடியும் என கருதி இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

 


இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அ.தி.மு.க. நிர்வாகிகள் மீண்டும் கூட்டணிக்கு அழைத்ததின் பேரில் செங்கல்பட்டு, வேலூர் மாவட்டத்துக்கான பட்டியலை கொடுத்திருப்பார்கள். பா.ம.க.வுக்கு திருப்திகரமான இடங்களை ஒதுக்கீடு செய்தால் அந்த மாவட்டங்களில் கூட்டணியை உறுதி செய்ய வாய்ப்புள்ளது  என்று கூறி இருந்தார்.

ஆனால் இதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கவில்லை. இது பற்றி அவர் தனது நிலைப்பாட்டை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

இது தொடர்பாக உள்ளூர் பா.ம.க. நிர்வாகிகள் கூறுகையில், அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை என்பது கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் வார்டுகளில் வெற்றியை தீர்மானிக்க உள்ளூர் அளவில் பேசி எங்களுக்குள் இடங்களை விட்டுக் கொடுக்கலாமா? என்பது குறித்து விவாதித்தோம் என்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை முழுவதுமாக வெளியிட்டாலும் அதன் பிறகு கூட நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கொள்ள முடியுமா? என்று பார்ப்போம் என்று தெரிவித்தனர். வார்டு மற்றும் பஞ்சாயத்துகளில் எந்த கட்சிக்கு அதிக வாக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப முடிவு செய்வோம் என்றும் அந்த பிரமுகர்கள் கூறினார்.

இதையும் படியுங்கள்... சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரம் போஸ்டர்கள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை

Tags:    

Similar News