செய்திகள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

வேலை உறுதி திட்ட சமூக தணிக்கையில் ஆட்சேபனை-ஊராட்சிகளிடம் இருந்து ரூ.80 லட்சம் வசூல்

Published On 2021-09-19 06:50 GMT   |   Update On 2021-09-19 06:50 GMT
வரும் நாட்களில் பணித்தள பொறுப்பாளர் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு தொழிலாளிக்கும் வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டாலும் 100 நாட்களுக்கு பின்  மற்றொரு பெயரில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதுநாள் வரை தொழிலாளருக்கு முறையான வருகைப்பதிவேடு இல்லாததால் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனால் சமூக தணிக்கையில் பணிகளுக்கும் விடுவிக்கப்பட்ட பணிகளுக்கும் ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது.

பின் கலெக்டர் தலைமையிலான உயர்மட்ட குழு கூடி சமூக தணிக்கையில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக  ஆட்சேபனை செய்யப்பட்ட செலவு தொகையை  சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் திரும்ப செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. 

அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில்  ஊராட்சிகளிடம் இருந்து, 80 லட்சம் ரூபாய் பணம் வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் திரும்ப செலுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் வினீத் கூறுகையில்‘பணி குறைபாடுகளை கண்டறிந்து உடனுக்குடன் தீர்வு பெறப்படும். செலவிட்டதில் ஆட்சேபனை இருந்தால்  அதிகாரிகள், அலுவலர் அல்லது பயனாளிகளிடம் இருந்து பணம் திரும்ப பெறப்படுகிறது.

இதனால் அரசு தரப்புக்கான வருவாய் இழப்பு தவிர்க்கப்படுகிறது. வரும் நாட்களில், பணித்தள பொறுப்பாளர் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News