செய்திகள்
ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவி ஏற்கிறார்

Published On 2021-09-17 21:17 GMT   |   Update On 2021-09-17 21:17 GMT
தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை:

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி (69) நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் மத்திய உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றியவர். 2019-ம் ஆண்டு முதல் நாகலாந்து கவர்னராக இருந்து வந்தார். தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கவர்னர் மாளிகை அதிகாரிகளும் அவரை வரவேற்று அழைத்துச்சென்றனர். கவர்னருடன் அவரது உறவினர்கள் 15 பேரும் வந்துள்ளனர்.


 
இந்நிலையில், தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்கிறார். அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

கவர்னர் மாளிகையில் இன்று காலை 10.35 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. அங்குள்ள தர்பார் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் பந்தல் அமைத்து விழா நடத்தப்படுகிறது.

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். கொரோனா காலகட்டம் என்பதால் அதிகபட்சமாக 500 பேர் பங்கேற்கும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News