செய்திகள்
மாதிரி வாக்குச்சாவடியை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

14 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல்: மாதிரி வாக்குச்சாவடியை பார்வையிட்டு கூடுதல் கலெக்டர் ஆய்வு

Published On 2021-09-17 11:53 GMT   |   Update On 2021-09-17 11:53 GMT
தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 14 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட மாதிரி வாக்குச்சாவடியை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், 12 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட மொத்தம் 14 பதவிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தற்செயல் தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 22-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) கவுரவ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்கு பெட்டியை திறக்கும் முறை, வாக்களிக்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அப்போது சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், சகிலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், குமரேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News