செய்திகள்
கோப்புபடம்

கால்நடைகளுக்கு பசுந்தழைகளை தீவனமாக அளிக்க அறிவுறுத்தல்

Published On 2021-09-17 06:10 GMT   |   Update On 2021-09-17 06:10 GMT
கால்நடைகளுக்கு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய இரண்டு தாது உப்புகளும் அதிக அளவில் தேவைப்படும்.
பல்லடம்;

பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மேலும் அதிக அளவில் மாடுகள் பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றன.

இந்தநிலையில் மாடுகளுக்கு, நோய்த்தாக்குதல் மற்றும் பல்வேறு குறைபாடுகளால் பால் உற்பத்தி குறைவதுடன் சில நேரங்களில், மாடுகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே கால்நடைகளுக்கு தீவனம் அளிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் கூறியதாவது:

கால்நடைகளுக்கு தீவனம் அளிப்பதில் கவனமாக செயல்பட வேண்டும். கால்நடை தீவனத்தில் மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு சத்து மூன்றும் இருப்பது போல தாது உப்புகளும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டியது அவசியமாகிறது,

கால்நடைகளுக்கு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய இரண்டு தாது உப்புகளும் அதிகளவில் தேவைப்படும். கால்சியம் சத்து குறைவால் பால் சுரம் எனும் நோயும், பாஸ்பரஸ் குறைவு காரணமாக ‘பைகா’ நோயும் கால்நடைகளுக்கு ஏற்படுகிறது.

தாது உப்புகள் தேவையான குறிப்பிட்ட அளவுகளில் தீவனங்களில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த தாது உப்புகளை அடர் தீவனத்துடன் சேர்த்து வழங்கலாம். தாது உப்புகள் நிறைந்த பசுந்தீவனங்களை உபயோகிப்பதாலும் அவற்றின் குறைபாடுகள் வராமல் தடுக்கலாம்.

வளர்ச்சியடைந்த மாடுகளுக்கு தினசரி, 30 கிராம், ஆடுகளுக்கு 5 கிராம் அளவு வழங்கலாம். கிராமங்களில் தாராளமாக கிடைக்கும் அகத்திக்கீரை, கல்யாண முருங்கை, சூபாபுல் போன்றவைகளில் தாது உப்புகள் நிறைந்துள்ளன. 

இது போன்ற பசுந்தீவன மரங்களையோ, காரமணி போன்ற தாவரங்களையோ வளர்த்து அதன் பசுந்தழைகளை தீவனத்திற்கு பயன்படுத்தலாம். இதனால் கால்நடைகளுக்கு தாது உப்புகள் மற்றும் வைட்டமின்களால் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News