செய்திகள்
ராமதாஸ்

தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மதுக்கடைகளை மூட வேண்டும் - ராமதாஸ்

Published On 2021-09-17 05:59 GMT   |   Update On 2021-09-17 09:11 GMT
மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் 75 சதவீதம் 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த மின்சார வாரியப் பணியாளர் மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வாழ்க்கையில் முன்னேற வேண்டிய இளைஞர் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்திருப்பது வேதனையளிக்கிறது.

திருவெறும்பூரை அடுத்த அய்யம்பட்டியைச் சேர்ந்த இளையராஜா என்ற இளைஞர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். 32 வயதான அந்த இளைஞர் நேற்று முன்நாள் மதுவுடன் நஞ்சைக் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் பல விதமான புற்று நோய்கள், கல்லீரல் அழற்சி, மாரடைப்பு உள்ளிட்ட 200 வகையான நோய்களுக்கு ஆளாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மனிதர்களை தற்கொலைக்குத் தூண்டும் மனநிலையை மது போதை உருவாக்குகிறது. தமிழ்நாட்டு இளைஞர்களில் சுமார் 37 விழுக்காட்டினர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.


மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் 75 சதவீதம் 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டப்பூர்வமாக மது அருந்துவதற்கான வயது 21 எனும் போது அதற்கு முன்பே 75 விழுக்காட்டினர் மதுவுக்கு அடிமை ஆகின்றனர் என்றால் தமிழ்நாட்டில் மது விற்பனை விதிகள் மதிக்கப்படவில்லை என்று தான் பொருள்.

தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 10 முதல் 20 விழுக்காட்டை மதுப்பழக்கத்தால் நாம் இழக்கிறோம். இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்கு மது தான் காரணமாகும். பல்லாயிரக்கணக்கான இளம்பெண்கள் கைம்பெண்கள் ஆவதற்கும், குழந்தைகள் ஆதரவற்றவர்களாக மாறுவதற்கும் மதுதான் காரணமாக உள்ளது.

தமிழ்நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். வாய்ப்பிருந்தால் உடனடியாகவோ இல்லாவிட்டால் படிப்படியாகவோ, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மது போதைக்கு அடிமையானவர்களை மீட்க தமிழகம் முழுவதும் போதை மீட்பு சிறப்பு மையங்களை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...20 ஓவர் அணியின் துணை கேப்டனாக ராகுலை நியமிக்க வேண்டும் - கவாஸ்கர்

Tags:    

Similar News