செய்திகள்
கோப்புபடம்

அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு - உடுமலை பகுதியில் 150 பேர் விண்ணப்பம்

Published On 2021-09-17 03:50 GMT   |   Update On 2021-09-17 03:50 GMT
உடுமலை புக்குளத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.
உடுமலை;

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் உடுமலை அருகேயுள்ள புக்குளத்தில் 320 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இந்த வீடுகள் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் சிறப்பு முகாம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

நகரமைப்பு அலுவலர் சாந்தி நிர்மலா பாய், தாசில்தார் ராமலிங்கம், நகரமைப்பு ஆய்வாளர்கள் வரதராஜன், கவுசல்யா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் 150க்கும் மேற்பட்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: 

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வேண்டுவோர், வருகிற 20-ந்தேதி வரை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

உடுமலை நகராட்சி எல்லையில் வசித்து வரும் பொதுமக்கள், குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி இருப்பு கையேடு நகல், குடும்பத்தலைவரின் புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பயனாளிகள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாகவும், பங்களிப்பு தொகையாக ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 700 ரூபாய் வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும்.

குடும்பத்தினருக்கு சொந்த வீடோ, நிலமே, இல்லை எனவும், அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடமாட்டேன் என்ற உறுதி மொழி படிவம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News