செய்திகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Published On 2021-09-16 23:12 GMT   |   Update On 2021-09-16 23:12 GMT
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதன்பின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நேற்று (நேற்று முன்தினம்) முதல் தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை 800-க்கும் மேற்பட்டவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டோம். அதில் 364 மாணவ- மாணவிகளிடம் பேசினோம். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் மாணவ-மாணவிகளைத் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் நேற்று (நேற்று முன்தினம்) ஒரே நாளில் 32 ஆயிரத்து 743 பயனாளிகளுக்கு தமிழகத்தில் மருந்து, மாத்திரைகள் தரப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை மாதத்துக்குள் 4 லட்சத்து 93 ஆயிரத்து 544 பேர் இந்த திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளனர். 1 கோடி இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிற இந்த திட்டம் தினசரி 30 ஆயிரத்தை கடந்திருக்கிற நிலை உருவாகி உள்ளது.



நீட் தேர்வு குறித்து ஏட்டிக்கு போட்டியாக பேசி மாணவர்களை குழப்பமடைய செய்ய நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம். பா.ஜ.க.வை சேர்ந்த அண்ணாமலை போன்றவர்கள் பொறுப்பாக பேச வேண்டும். யாரால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது, யாரால் நீட் தேர்வு வலியுறுத்தப்பட்டு வருகிறது,

இத்தனை உயிர்கள் மடிந்ததற்கு காரணம் யார்? தலைகீழாக நின்றாலும், நீட் தேர்வு விலக்கு அளிக்க மாட்டோம் என்று அடம்பிடித்துக் கொண்டிருப்பது யார்? என்று மக்களுக்கு தெரியும்.

தமிழகத்தில் 83 மாணவர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். விடுதியில் தங்கி உள்ள ஒரு சில மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

Tags:    

Similar News