செய்திகள்
கொரோனா வைரஸ்

குமரியில் புதிதாக 16 பேர் பாதிப்பு- 9-ம் வகுப்பு மாணவிக்கு தொற்று

Published On 2021-09-16 11:13 GMT   |   Update On 2021-09-16 11:13 GMT
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவிற்கு 43 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவர் பலியானார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கடை வீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமி நாசினி தெளிக்கும் பணி, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதியில் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நேற்று 3,195 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதில் 7 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேரில் 9 பேர் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவிற்கு 43 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த 69 வயது மூதாட்டி ஒருவர் பலியானார்.

இதையடுத்து கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் கடந்த 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் 483 பள்ளிகள் திறக்கப்பட்டது. 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் படிக்கும் சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு மாணவிகளின் சளி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாகர்கோவில், முஞ்சிறை பகுதிகளில் உள்ள பள்ளியில் படித்த 3 மாணவ-மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கல்லூரிகளில் படித்து வந்த 13 மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். நெய்யூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ-மாணவிகளின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.

இதில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News