செய்திகள்
வனப்பகுதியில் உறங்கும் குட்டியானைகளுக்கு தாய் யானை பாதுகாப்பாக நிற்பதை காணலாம்

வால்பாறை அருகே 2 குட்டிகளை தூங்க வைத்து காவல் காத்த தாய் யானை

Published On 2021-09-15 05:58 GMT   |   Update On 2021-09-15 05:58 GMT
சிறுமுகை வனப்பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு பவானி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் யானைகள் தொடர்ந்து தொழிற்சாலை வளாகத்திலேயே முகாமிட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்:

வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்குட்டபட்ட முடீஸ் வட்டார பகுதியை சேர்ந்த முத்துமுடி எஸ்டேட் 2-வது தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் 2 குட்டிகளுடன் புகுந்த காட்டு யானைகள், அங்கு வசித்து வரக்கூடிய லீலா என்பவரின் வீட்டின் முன்பக்க அறையை உடைத்து உள்ளிருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

மேலும் சாப்பிட எதுவும் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த யானைகள் வீட்டில் உள்ள பொருட்களை துதிக்கையால் தூக்கி வெளியில் எறிந்தது.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து யானையை விரட்டினர். ஆனால் நீண்ட நேரம் அங்கு நின்ற யானை கூட்டம் நள்ளிரவு 2.30 மணிக்கு அங்கிருந்து சென்றது. தொடர்ந்து பன்னிமேடு எஸ்டேட், சங்கிலிரோடு எஸ்டேட் மற்றும் முத்துமுடி எஸ்டேட் பகுதிக்கும் இடைப்பட்ட சிறு வனச்சோலை பகுதியிலேயே முகாமிட்டுள்ளது. இந்த கூட்டத்தைச் சேர்ந்த தாய் யானை தனது 2 குட்டிகளை உறங்கச் செய்து காவலுக்கு நின்று கொண்டிருந்தது. யானை அடர்ந்த வனத்துக்குள் செல்லாமல் அங்கேயே நிற்பதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதேபோல மேட்டுப்பாளையம் அருகிலும் யானைகள் முகாமிட்டுள்ளன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் விஸ்கோஸ் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலை கடந்த பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடப்பதால் அந்த வளாகம் முழுவதும் செடிகள், கொடிகள், பெரிய அளவிலான மரங்கள் வளர்ந்து வனப்பகுதி போலவே காட்சியளிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமுகை வனச்சரகத்தில் இருந்து 4 காட்டு யானைகள் உணவு தேடி விஸ்கோஸ் தொழிற்சாலை வளாகத்தில் முகாமிட்டுள்ளது. அவை அவ்வப்போது ஆலையை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

தற்போது சிறுமுகை வனப்பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு பவானி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் யானைகள் தொடர்ந்து இந்த தொழிற்சாலை வளாகத்திலேயே முகாமிட்டுள்ளது.

நேற்று இரவு 4 காட்டு யானைகளும் விஸ்கோஸ் தொழிற்சாலையை விட்டு வெளியேறி அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து கூச்சலிட்டு, யானையை விரட்ட முயன்றனர்.

ஆனால் யானைகள் செல்லாமல் அங்கேயே நின்றது. இதையடுத்து பொதுமக்கள் பயத்தில் வீட்டிற்குள் போய் தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்ததை அடுத்து யானைகள் அருகே உள்ள விஸ்கோஸ் தொழிற்சாலை வளாகத்துக்குள் சென்றது. தொடர்ந்து வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


Tags:    

Similar News