செய்திகள்
மரபணு பகுப்பாய்வு கூடத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார்

மரபணு பகுப்பாய்வு கூடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2021-09-14 09:54 GMT   |   Update On 2021-09-14 10:46 GMT
மரபணு பகுப்பாய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, கொரோனா நோயின் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட இயலும்.
சென்னை:

சட்டமன்ற பேரவையில் 2.8.2021 அன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது “மரபணு பகுப்பாய்வு கூடம் ரூ. 4 கோடி செலவில் சென்னை, டி.எம்.எஸ். வளாக பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும்” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.



கொரோனா நோய் தொற்றினை உருவாக்கும் வைரஸ், அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களினால் புது வகையாக உருமாறி, நோய் தொற்றின் தாக்கத்தினை தீவிரப்படுத்துகிறது. உருமாறிய
கொரோனா வைரஸ்
களை கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். இத்தகைய மரபணு பகுப்பாய்வகம், எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை.

தமிழகத்தில் பரவும் கொரோனா வைரஸ்களின் உருமாற்றத்தினை கண்டறிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் இயங்கும் மரபணு பகுப்பாய்வகங்களில் கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தது.

தற்போது, இக்குறைகளை போக்கும் வகையில், பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வுக்கூடம் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாய்வகத்தில் உருமாறிய
கொரோனா வைரஸ்
களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து, அதனடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட இயலும்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்துத் துறைக்கு திறன்மிகு நிலை II பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு மருத்துவக் கல்வித் துறையில் 51 வாரிசுதாரர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் 15 வாரிசுதாரர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 15 வாரிசுதாரர்களுக்கும், டாம்ப்கால் நிறுவனத்தில் ஒரு வாரிசுதாரருக்கும், என 82 வாரிசுதாரர்களுக்கும், பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு பணி அலுவலர் செந்தில் குமார், தேசிய நலவாழ்வு குழுமத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ். கணேசன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் எஸ். குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.நாராயணபாபு, தமிழ்நாடு மாநில சுகாதார போக்குவரத்துத்துறை இயக்குநர் எஸ். நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News