செய்திகள்
மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள காட்சி

கோடம்பாக்கத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கியது

Published On 2021-09-14 06:44 GMT   |   Update On 2021-09-14 06:44 GMT
மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கியதால் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்அவுஸ் முதல் 80 அடி சாலை வரை ஒரு வருடம் போக்குவரத்து மாற்றிவிடப்படுகிறது.
சென்னை:

சென்னை மெட்ரோ ரெயிலின் 2-ம் கட்ட திட்டம் ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. இதில் 3 வழித்தடங்கள் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கவும், ரெயில் நிலையங்கள் கட்டவும் 4 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியிலும் பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன. போரூர் ஏரி, போரூர் புதிய பாலம், அய்யப்பன் தாங்கல் வரை பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்கி உள்ளன.

வளசரவாக்கம் மாநகராட்சி அலுவலகம் அருகில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைகிறது. இங்கு ரெயில் பாதை அமைக்கப்படும் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள், கட்டிடங்கள் அகற்றப்பட உள்ளது. இதற்காக அளந்து அடையாளப்படுத்தி காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி பைபாஸ்- கலங்கரை விளக்கம் இடையே 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாதை அமைக்கப்படுகிறது.

இந்த பாதையில் கோடம்பாக்கம் பவர் அவுஸ்- சாலிகிராமம் 80 அடி சாலைவரை பணிகள் இன்று தொடங்கியது. இதற்காக ரோட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.



மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கியதால் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்அவுஸ் முதல் 80 அடி சாலை வரை ஒரு வருடம் போக்குவரத்து மாற்றிவிடப்படுகிறது.

பவர்அவுசில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் வாகனங்கள் நேராக செல்லமுடியாது. அம்பேத்கார் சிலையில் இருந்து இடது புறமாக திரும்பி அசோக்நகர் போலீஸ் நிலையம், வழியாக லட்சுமண்சுருதி வந்து வலது புறமாக திரும்பி வடபழனி செல்ல வேண்டும்.

அதே நேரம் வடபழனியில் இருந்து கோடம்பாக்கத்துக்கு செல்லும் பாதையில் போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை.

ரோட்டில் தடுப்பு வேலிகள் அமைப்பது, ரோட்டோரத்தில் இருந்த அறிவிப்பு பலகைகளை அகற்றியும், நடைபாதைகளை உடைத்தும் வாகன போக்குவரத்துக்கு வழிகள் அமைத்தனர். இதனால் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யவில்லை. நாளை முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாகவே கோடம்பாக்கம் ஆற்காடு சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும். இன்று ரோட்டில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லவேண்டி உள்ளது. இதனால் இன்று போக்குவரத்து நெரிசலில் அந்த பகுதி திக்குமுக்காடியது.


Tags:    

Similar News