செய்திகள்
திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஜாதி, மதங்களை பாரோம் என்று கம்பீரமாக அறிவிக்க பாரதி இன்றும் தேவைப்படுகிறார்- மு.க.ஸ்டாலின் பேச்சு

Published On 2021-09-12 09:57 GMT   |   Update On 2021-09-12 09:57 GMT
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே என்று கண்டிக்க பாரதி இன்றும் தேவைப்படுகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை:

சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

மகாகவி பாரதியினுடைய சிந்தனைகள் யாருக்கும் கட்டுப்படாத சிந்தனைகள். சுதந்திர சிந்தனைகள் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலே அடக்க முடியாத சிந்தனைகள் கொண்டவராக பாரதி இருந்ததால் தான் இன்று நாம் அவரை போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

எந்த அடக்குமுறையையும் கேள்வி கேட்டவர் பாரதியார்.

* தெய்வம் நீ என்று உணர்

* போர்த்தொழில் பழகு என்ற அவரது புதிய ஆத்திச்சூடி வரிகள் எல்லாம் எத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் எழுச்சியையும் உணர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியவை. அதனால் தான் அவரை ‘மக்கள் கவிஞர்’ என்று 1947-ம் ஆண்டே மகுடம் சூட்டி எழுதினார் பேரறிஞப் பெருந்தகை அறிஞர் அண்ணா.

அதனால் தான் கழக அரசு அமைந்தவுடன், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரான போது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கி பெருமை சேர்த்தார் தலைவர் கலைஞர் அவர்கள். அன்றைக்கு அமைச்சராக இருந்த மரியாதைக்குரிய சி.பா. ஆதித்தனார் அவர்கள் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை நேற்றைக்கு முன்தினம் தமிழக அரசு சார்பில் நான் அறிவித்திருக்கிறேன்.

‘இது எனது அரசல்ல, நமது அரசு’ என்று நான் சொல்லி இருக்கிறேன். இந்த அரசு ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஒரு கொள்கையின் அரசாக, ஒரு இனத்தின் அரசாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம். அந்த அடிப்படையில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் உணர்ச்சி மிகு கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியைத் தமிழ்நாடு போற்றுகிறது.

இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளைப் போற்றுவதற்கும் மொழிப் போராட்டத்துக்காக பாடுபட்ட தியாகிகளை மதிப்பதற்கும் எல்லைப் போராட்ட வீரர்களை போற்றுவதற்கும் தி.மு.க. அரசு எப்போதும் மறந்தது இல்லை. நான் அதை பட்டியலிட ஆரம்பித்தால் அது மிக நீளமாகப் போய் விடும்.

பாரதியைப் போற்றுவதற்குக் காரணம், அவரது சிந்தனைகள் காலங்களைக் கடந்தும் தேவைப்படுபவை என்பதால் தான்.

* சாதி இரண்டொழிய வேறில்லை என்றே...

தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் என்ற பாரதி இன்றைக்கு தேவைப்படுகிறார்!

* ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ என்று விரட்டிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே என்று கண்டிக்க பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* ஜாதி, மதங்களைப் பாரோம் என்று கம்பீரமாக அறிவிக்க பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொதுவுடமை என்று பிரகடனம் செய்வதற்கு பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழ் வெறியோடு பாடக்கூடிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* யேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து எழுதி விட்டு ஓம் சக்தி என்று முடிக்கும் சகோதரத்துவப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* சங்கராபரணம் ராகத்தில் அல்லாவுக்கும் பாட்டு எழுதிய பரந்தமனப்பான்மை பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று சுற்றுச்சூழல் பேசிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

இத்தகைய பாரதிகள் இன்றும் தேவை!

பாரதி சொன்ன மேலோரை உருவாக்க வானவில் பண்பாட்டு மையம் போன்ற அமைப்புகள் இன்னும் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அந்த முயற்சிக்கு தி.மு.க. தலைமையில் அமைந்திருக்கக்கூடிய அரசு என்றைக்கும் துணை நிற்கும், துணை நிற்கும் என்ற உறுதியைச் சொல்லி,

வாழ்க பாரதி! பாரதி! என்று கூறி விடை பெறுகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


Tags:    

Similar News