செய்திகள்
சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆண்கள்.

கொரோனா தடுப்பூசி முகாம்களில் ஆர்வத்துடன் திரண்ட பொதுமக்கள்- 20 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு

Published On 2021-09-12 05:58 GMT   |   Update On 2021-09-12 05:58 GMT
நீட் தேர்வு எழுதுவதற்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் சென்னை வந்திருந்தனர். அவர்களில் பலர் சிறப்பு முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பலியான நிலையில், கொரோனா 3-வது அலையை தவிர்ப்பதற்காக தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று பெரிய அளவில் நடத்தப்பட்டது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளி, கல்லூரிகள், விமான நிலையம், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது.

காலை 7 மணியில் இருந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்பட்டன. இன்று சிறப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அரசு சார்பில் ஒரு வாரத்துக்கு முன்பே இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யும் பணி மாவட்ட கலெக்டர்கள் மூலம் செய்யப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியிலும் தடுப்பூசி போடாத மக்களை தடுப்பூசி போட வைக்க விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக தெருத்தெருவாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. செல்போன்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுக்கப்பட்டிருந்தன.

இதனால் இன்று காலையில் தடுப்பூசி முகாம்களுக்கு மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டனர். பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும்போது ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் முதலுதவி சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட உதவிகள் செய்தனர். அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடாதவர்கள் வந்து ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். இதனால் நிறைய முகாம்களில் காலையிலேயே கூட்டம் அதிகம் காணப்பட்டது.



தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊசி போட வருபவருடன் துணைக்கு ஒரு நபர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். சென்னையை பொறுத்தவரை 1,600 சிறப்பு முகாம்களில் இன்று காலை 7 மணியில் இருந்தே தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஒவ்வொரு வார்டிலும் 8 இடங்களில் தடுப்பூசி போட முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. அனைத்து முகாம்களிலும் காலை 8 மணிக்கே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தடுப்பூசி போடுவதற்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள ஆர்வத்தையே இது வெளிப்படுத்தியது.

ஒவ்வொரு வார்டிலும் 2 நடமாடும் தடுப்பூசி முகாமும் செயல்பட்டது. ஒரே இடத்தில் நடமாடும் முகாம்கள் 4 மணி நேரம் நிறுத்தப்பட்டு அங்குள்ள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இதுதவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டன.

சென்னையில் 600 டாக்டர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 7000 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் சிறப்பு முகாம்கள் எங்கெங்கு நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ள 044-25384520, 044-46122300 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று 2 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் ஏராளமான பொதுமக்கள் இந்த தொலைபேசியில் முகாம் நடைபெறும் இடங்களை கேட்டறிந்து கொண்டனர்.

இதுதவிர  https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற இணையதளத்திலும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் விரிவாக தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதனை பார்த்தும் பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட வந்திருந்தனர்.

நீட் தேர்வு எழுதுவதற்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் சென்னை வந்திருந்தனர். அவர்களில் பலர் சிறப்பு முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அனைத்து முகாம்களிலும் தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகள் கைவசம் இருந்தது. இதனால் முகாமுக்கு வந்த யாரும் தடுப்பூசி போடாமல் ஏமாற்றம் அடையவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

சென்னையில் தடுப்பூசி போடும் முகாம்களை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் சென்று பார்வையிட்டார். மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி, நங்கநல்லூர் டி.என்.ஜி.ஒ. காலனி, அண்ணா பல்கலைக்கழக ஹெல்த் சென்டர், அடையார் கஸ்தூரிபா நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, கோட்டூர்புரத்தில் உள்ள மாநகராட்சி சுகாதார மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு தடுப்பூசி போட வந்த மக்களிடம் ஏதேனும் அசவுகரியம் உள்ளதா? ஏற்பாடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா என்றும் விவரங்களை கேட்டறிந்தார். இதேபோல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் சிறப்பு முகாம்களுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னை ஓமந்தூரார் பன்நோக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலையில் சென்று தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டார்.



இதனை தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். மெகா தடுப்பூசி முகாம்கள் குறித்து டாக்டர் ராதா கிருஷ்ணன் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 62 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 3-வது அலையில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன் கூட்டியே சிறப்பு ஏற்பாடுகள் செய்து தடுப்பூசி முகாம்களை அமைத்துள்ளோம். தடுப்பூசி முகாம்களில் இதுவரை அதிகபட்சமாக ஒரேநாளில் 6 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த முறை 20 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்து களத்தில் இறங்கியுள்ளோம். எங்களிடம் 29 லட்சம் தடுப்பூசி கைவசம் உள்ளது. இன்று பிற்பகலில் 13.36 லட்சம் தடுப்பூசி சென்னைக்கு வருகிறது. எனவே தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசி உள்ளது.

எங்களை பொறுத்தவரை இன்று ஒரேநாளில் 10 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டாலே பெரிய சாதனை தான். ஆனாலும் நாங்கள் 25 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மக்களிடையே உள்ள ஆர்வத்தை பொறுத்து இது அமையும்.

தற்போது சென்னை புறநகர் செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கொரோனா அதிகமாகி வருவதால் இதை தடுப்பதற்கு தடுப்பூசிதான் ஒரே தீர்வு என்ற அடிப்படையில் தடுப்பூசி போட வருமாறு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

இன்றைய நிலவரப்படி தடுப்பூசி போடாதவர்கள் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் ஐ.சி.யூ. வார்டில் உள்ளனர். தடுப்பூசி போட்டவர்கள் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் நிலை உள்ளது. இதுதான் யதார்த்தம்.

எனவே பொது மக்கள் கொரோனா 3-வது அலை பாதிக்காமல் இருக்க தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். அரசு மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு முகாமை குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News