செய்திகள்
கோப்புப்படம்

கோவையில் நாளை நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு

Published On 2021-09-11 11:19 GMT   |   Update On 2021-09-11 11:19 GMT
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
கோவை:

கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுதை முன்னிட்டு கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் இன்று கோவையில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் முழுவதும் நாளை 1.5 லட்சம் தடுப்பூசிகளுடன் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 1,474 மையங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை ராமநாதபுரம் அரசு பள்ளியிலும் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் சங்கர் இன்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது தடுப்பூசி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர சுகாதார அலுவலர்கள் உடனிருந்தனர்.

இந்த ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் 1.5 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 1, 474 முகாம்களில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு தடுப்பூசி செலுத்துபவர், ஒரு டேட்டா ஆபரேடர் என 2,980 பேர் பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு மையத்திற்கும் மக்களை அழைத்துவர 2 பேர் வீதம் 2, 959 அங்கன்வாடி பணியாளர்களும், இந்த பணிகளை கண்காணிக்க 338 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வணிக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை முகாமிற்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாளை பல்வேறு நிறுவனங்கள் விடுமுறை அளிக்க ஏதேனும் உத்தரவிடப்பட்டுள்ளதா? என்ற நிருபர்களின் கேள்விக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் கூறும்போது, “ஊரகப்பகுதிகளில் காலை 7 மாலை 7 மணிவரை நடைபெறும். ஏதேனும் ஒரு சிப்ட் அடிப்படையில் ஊழியர்களை முகாமிற்கு அழைத்துச் செல்லலாம். விடுமுறை விட அவசியம் இல்லை.” என்றார்.
Tags:    

Similar News