செய்திகள்
அழுகிய நிலையில் பரவி கிடக்கும் சின்னவெங்காயத்தை படத்தில் காணலாம்.

அறுவடை செய்த தானியங்களை உலர்த்த முடியாமல் அவதியுறும் விவசாயிகள்

Published On 2021-09-09 10:12 GMT   |   Update On 2021-09-09 10:12 GMT
கனமழை காரணமாக வெங்காயம், தக்காளி, கம்பு, உளுந்து, மிளகாய் போன்றவைகளின் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் குமரலிங்கம், சாமராயபட்டி, உரல்பட்டி, பாப்பாங்குளம், கிருஷ்ணாபுரம், கருப்பசாமி புதூர், காரத்தொழுவு, மயிலாபுரம், ருத்ர ஆலயம், பெருமாள் புதூர், எலையமுத்தூர், ஆண்டிகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. 

இப்பகுதி விவசாயிகள் வெங்காயம், தக்காளி, மிளகாய், புடலை, அவரை, பாகல் உள்ளிட்ட காய்கறிகள் மட்டுமின்றி உளுந்து, கம்பு, சோளம் உள்ளிட்ட தானிய வகைகளை  பயிரிட்டனர். 

இதற்கு அமராவதி ஆற்றுப் பாசனம், கிணற்று பாசனம், கால்வாய் பாசனம் தவிர மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களில் போர்வெல் அமைத்தும் பாசனம் செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2 வாரமாக பெய்து வந்த கனமழை காரணமாக அறுவடை செய்த உளுந்து தானியங்களை விற்பனைக்கு தயார் செய்யமுடியாமல் போய்விட்டது. 

இதேபோல் தக்காளி, வெங்காயம், மிளகாய் போன்றவையும் தொடர் மழை காரணமாக அழுகி மகசூல் குறைய தொடங்கியுள்ளது. கம்பு தானியங்களும் தொடர் மழைக்கு தாக்கு பிடிக்கவில்லை.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் கிடைத்த விலைக்கு விற்று நஷ்டமடைந்த விவசாயிகள், நடப்பாண்டில் தொடர்ந்து பெய்த கனமழையால் மிகுந்த நஷ்டத்தை மீண்டும் சந்தித்துள்ளனர். 

இதுகுறித்து சாமராயபட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன் கூறியதாவது:

ஆண்டுதோறும் புரட்டாசி 15 க்கு பின்னர் தான் பருவமழை துவங்கும். அதற்குள் காய்கறிகள், தானியங்கள் அறுவடை செய்து பதப்படுத்தி விற்பனை செய்து விடுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு கடந்த 15 நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்த கனமழை காரணமாக வெங்காயம், தக்காளி, கம்பு, உளுந்து, மிளகாய் போன்றவைகளின் மகசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

உளுந்து செடிகளை காய வைக்க முடியாத அளவிற்கு மேகம் மப்பும் மந்தாரமாக இருக்கிறது. ஏக்கருக்கு ரூ.1லட்சம் செலவழித்து சின்ன வெங்காயம் பயிரிட்ட நிலையில் மழை காரணமாக வெங்காயத்தை பட்டறை போட்டு பதப்படுத்த முடியாமல் தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை ரூ.8 க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். 

இதனால் அறுவடைக் கூலி மட்டுமே கைக்கு கிடைக்கும். சிறு, குறு விவசாயிகள் இந்த மழையால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்த ஆண்டு பருவம் தப்பிய மழை எங்களை வாட்டுகிறது என்றார்.
Tags:    

Similar News