செய்திகள்
கோப்புபடம்

அபிராமபுரத்தில் வாலிபர் அடித்து கொலை - நண்பர் கைது

Published On 2021-09-08 06:34 GMT   |   Update On 2021-09-08 06:34 GMT
எனது மகனை கொன்றவர்களை போலீசார் கைது செய்து உரிய தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று வாலிபரின் தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.

சென்னை:

அடையாறு கிரீன்வேஸ் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் மகேஸ்வரன். 25 வயதான இவர் கடந்த 5-ந் தேதி மாயமானார்.

இதுதொடர்பாக அவரது தாய் பஞ்சவர்ணம் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

காணாமல் போன மகேஸ்வரனை கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதியில் துலுக்கானத்தம் மன் கோவில் எதிரில் வாலிபரின் உடல் ஒன்று கரை ஒதுங்கியது. அவரது உடலை கைப்பற்றி பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அபிராமபுரம் போலீசார் மாயமான மகேஸ்வரனின் தாய் பஞ்சவர்ணத்தை அழைத்து சென்று கரை ஒதுங்கிய வாலிபரின் உடலை காட்டினார்கள். அப்போது அவர், இது தனது மகனின் உடல்தான் என்று கூறி கதறினார்.

இதையடுத்து அபிராமபுரம் போலீசார் நடத்திய விசாரணையில் மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மகேஸ்வரன் கடந்த 5-ந் தேதி தனது நண்பர் கார்த்திக்குடன் (வயது 24) வெளியில் சென்ற போதுதான் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. கார்த்திக் அன்னை சத்யா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர்.

அதனை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், மகேஸ்வரனை கார்த்திக் கத்தியால் குத்தி கொலை செய்து கடலில் வீசியது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட்டில் கார்த்திக் சரணடைய இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு மறைந்து இருந்து கண்காணித்தனர். இதனை அறிந்ததும் கார்த்திக் சரண் அடையாமல் தப்பியோடி தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

கார்த்திக் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர் யார், யாருடன் பேசி உள்ளார் என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டினார்கள். கார்த்திக்கின் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் கார்த்திக்கை அபிராமபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் மகேஸ்வரன் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவரது தாய் பஞ்சவர்ணம் கூறும் போது, ‘‘எனது மகனை கொன்றவர்களை போலீசார் கைது செய்து உரிய தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்’’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News