செய்திகள்
மதுரை ஐகோர்ட்

தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நம்பிக்கை வரும் வகையில் விசாரணை நடத்த வேண்டும்- மதுரை ஐகோர்ட்

Published On 2021-09-07 19:59 GMT   |   Update On 2021-09-07 19:59 GMT
இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சத்தை பறித்தது தொடர்பான வழக்கை விசாரிக்கும் மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு துணை சூப்பிரண்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை:

மதுரை நாகமலை புதுக்கோட்டை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அர்ஷத் (வயது32) என்பவர் சொந்த தொழில் செய்வதற்காக வைத்திருந்த ரூ.10 லட்சம் பணத்தை மிரட்டி பறித்து சென்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ் பெறுவதாக அவரது தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வசந்தி கைதான பின், இந்த வழக்கின் நிலை குறித்து தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்ஸ்பெக்டர் வசந்தி ரூ.10 லட்சத்தை பறித்தது தொடர்பான வழக்கை விசாரிக்கும் மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவு துணை சூப்பிரண்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் அரசு ஊழியர். அவரது செயல் அவர் சார்ந்திருக்கும் துறையை களங்கப்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் சாதாரண மக்கள், காவல்துறை மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. யார் தவறு செய்தாலும் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அந்த நோக்கத்தை பிரதானமாக கொண்டு இந்த வழக்கு விசாரணையை போலீசார் தொடர வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

பின்னர் வசந்தியின் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News