செய்திகள்
அமைச்சர் சாமிநாதன்

காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி நினைவு மண்டபம் மேம்படுத்தப்படும்- அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

Published On 2021-09-07 09:27 GMT   |   Update On 2021-09-07 09:27 GMT
கீழ்பவானி பாசனத்திட்டம் உருவாக காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
சென்னை:

சட்டசபையில் அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

75-வது சுதந்திர தினத்தையொட்டி பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் ஒலி-ஒளி காட்சிகள் அமைக்கவும், சுதந்திர போராட்ட தலைவர்கள் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் குறும்படங்கள் தயாரிக்கவும், மக்களுக்கு தொண்டாற்றிய தியாகிகளை நினைவு கூரும் வகையில் நினைவு மண்டபங்களை புதுப்பிக்கவும், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி மற்றும் ஒலி-ஒளி காட்சி போன்றவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் தியாகச் சீலர்களை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம், காமராஜர் நினைவு மண்டபம், பக்தவச்சலம் நினைவு மண்படம், ராஜாஜி நினைவு மண்டபம் ஆகியவற்றை மேம்படுத்த ரூ.3 கோடியே 38 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சுதந்திர போராட்ட வீரர் பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கரின் நினைவை போற்றும் வகையிலும் இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் திருப்பூர் மாவட்டத்தில் அண்ணாருக்கு திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான வி.கே.பழனிசாமி கவுண்டருக்கு ஆழியாறு அணையின் பூங்காவில் நினைவு மண்டபம் மற்றும் மார்பளவு சிலை அமைக்கும் பணிகள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதனை பி.ஏ.பி. திட்டப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவு மண்டபமாக மாற்றி அமைக்கப்படும்.

மேலும் பொள்ளாச்சியில் செயல்படும் நீர்வளத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம் வளாகம் என்று பெயர் சூட்டப்படும்.

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் சுப்பராயனின் சேவைகளை நினைவு கூரும் வகையில் அண்ணாருக்கு சென்னையில் முழு திருவுருவச் சிலை அமைக்க ரூ.10 லட்சம் மற்றும் நாமக்கல் நகரில் அவரது பெயரில் ஒரு அரங்கம் அமைக்க ரூ.2 கோடியே 50 லட்சம் என ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கீழ்பவானி பாசனத் திட்டம் உருவாக காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரனுக்கு ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும். இதற்காக ரூ.2 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

முன்னாள் அமைச்சரும், ஏழை எளியோர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றி மறைந்த கோவிந்தசாமிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைக்க ரூ.2 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் கூட்ட அரங்கம் அமைத்தல், பராமரிப்புப் பணிகள் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த ரூ.1 கோடியே 58 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சக கட்டிடங்கள் புணரமைக்கப்படும். சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ஒரு காகித சிப்பம் கட்டும் எந்திரம் ரூ. 5 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News