செய்திகள்
விநாயகர் சிலைகள்

விநாயகர் சிலை தயாரிப்பாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரணம்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2021-09-07 08:52 GMT   |   Update On 2021-09-07 10:24 GMT
பொதுமக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திலே கொண்டு, அனைத்து சமய விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதற்கு பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு எப்போதும் போல் அனுமதி அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதா உறுப்பினர் எம்.ஆர்.காந்தி விடுத்த கோரிக்கைக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.

அவர் கூறும்போது, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படியே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று சட்டசபையில் பாரதிய ஜனதா உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மீண்டும் மீண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக கோரிக்கையை முன்வைத்தார்.

இது தொடர்பாக பேசிய அவர் பக்கத்து மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்படாத நிலையில் தமிழகத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது.

எனவே தமிழகத்திலும் எப்போதும் போல விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற அரசு அனுமதிக்க வேண்டும் என்றார்.



இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கே உறுப்பினர் நயினார் நாகேந்திரன் விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதற்கு அனுமதி தர வேண்டுமென்று ஒரு கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார். நான் ஒரு விளக்கத்தை அவருக்கு மட்டுமல்ல; இந்த மன்றத்தில் இருக்கக்கூடிய அனைவருக்கும் ஏன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.

கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை 30.9.2021 வரை தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.

கேரள மாநிலத்திலே, ஓணம் மற்றும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு, அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு அனுமதி அளித்த காரணத்தினால் தான், அங்கே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் இன்று வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை முழுமையாகத் தடுக்கப்படவில்லை; அங்கு மிங்கும் கொஞ்சம் இருக்கிறது. அந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு 50 ஏறுகிறது; 50 குறைகிறது. இப்படி ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது.

ஆகவேதான், பொதுமக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திலே கொண்டு, 15.9.2021 வரை அனைத்து சமய விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது
விநாயகர் சதுர்த்தி
விழாவிற்கும் பொருந்தும்.

பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழா கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளே தவிர, தனி நபர்களைப் பொறுத்தவரையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம் என்று அரசு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, இதையெல்லாம் மனதிலே கொண்டுதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

அதையொட்டி, நான் இன்னொரு அறிவிப்பையும் நான் இங்கே வெளியிட விரும்புகிறேன்.

நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக, பொது இடங்களில் விழாக்களைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தொழிலை மேற்கொள்ள இயலாத நிலையில், அவர்களது வாழ்வாதாரம்கூட பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதனையெல்லாம் இந்த அரசு கருத்திலேகொண்டு, இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக்கால பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


Tags:    

Similar News