செய்திகள்
ஊட்டி மலை ரெயில்

ஊட்டி மலை ரெயில் இன்று மீண்டும் இயக்கம்- சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2021-09-06 09:55 GMT   |   Update On 2021-09-06 09:55 GMT
மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு முதல் வகுப்பில் பயணம் செய்ய ரூ.600-ம், இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.295 -ம் வசூலிக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகள், பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கண்களுக்கு குளிர்ச்சியை தரும் தேயிலை எஸ்டேட்டுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். 130 ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்த மலை ரெயிலை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மலை ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வு சமயங்களில் அவ்வப்போது மலைரெயில் இயக்கப்பட்டது.

இந்தநிலையில் இரண்டாவது கொரோனா அலை பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி முதல் மீண்டும் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை இன்று முதல் தொடங்கும் என சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இன்று காலை 7.10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. 4½ மாதங்களுக்கு பிறகு மலை ரெயில் இயக்கப்பட்டதால் சுற்றுலாபயணிகள் ஆர்வத்துடன் பயணித்தனர். முன்பதிவு செய்த சுற்றுலாபயணிகள் மட்டும் ரெயிலில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்- ஊட்டிக்கு முதல் வகுப்பில் பயணம் செய்ய ரூ.600-ம், இரண்டாம் வகுப்பில் பயணிக்க ரூ.295 -ம் வசூலிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம்- குன்னூருக்கு முதல் வகுப்பு கட்டணம் ரூ.445 ஆகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.190 ஆகவும் இருந்தது.
Tags:    

Similar News