செய்திகள்
கொரோனா வைரஸ்

திருச்சி-புதுக்கோட்டையில் 3 மாணவிகளுக்கு கொரோனா- தனியார் பள்ளி ஒரு வாரம் மூடல்

Published On 2021-09-06 09:21 GMT   |   Update On 2021-09-06 09:21 GMT
திருச்சி சோமரசம்பேட்டை அருகே இரட்டை வாய்க்காலில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
திருச்சி:

தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவ, மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருந்தன. அதையொட்டி, பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின்னரே பள்ளிக்கு நேரடி வகுப்பில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் சில மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த மாணவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். சமீபத்தில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஒரு சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததை காரணம் காட்டி அப்பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் மூடப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி அருகே தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு என்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டை அருகே இரட்டை வாய்க்காலில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று முதல், ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள முள்ளங்குறிச்சியில் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அந்த பள்ளியை சேர்ந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவி இருவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து அந்த 2 மாணவிகளும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அனைத்து மாணவ, மாணவிகளையும் வெளியேற்றப்பட்டனர். பிறகு பள்ளியில் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே சம்பவத்தை அறிந்து பள்ளிக்கு வந்த தாசில்தார் விசுவநாதன், தொற்று உறுதியான மாணவிகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பள்ளியில் நடைபெற்று வரும் சுகாதார நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், வகுப்பறைகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்தாத பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்திலேயே தடுப்பூசி முகாம் உட னடியாக நடத்தி தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றார்.
Tags:    

Similar News