செய்திகள்
தமிழக சட்டசபை

கடைகளில் ஊழியர்கள் நின்றபடியே பணிபுரிவதை தடுக்க சட்ட திருத்தம்- சட்டசபையில் தாக்கல்

Published On 2021-09-06 08:47 GMT   |   Update On 2021-09-06 09:24 GMT
தமிழகத்தில் சில ஜவுளி நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்திலும் அமர முடியாத சூழல் நிலவி வருகிறது.
சென்னை:

சட்டசபையில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் இன்று சட்டத்திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர்.

அதன் விளைவாக பல்வேறு உடல்நல கேடுகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். தங்களது வேலை நேரம் முழுவதும் நிற்கும் வேலை ஆட்களின் நிலைமையை கருத்தில்கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களில் அனைத்து வேலையாட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என இந்த அரசு கருதுகிறது.

கடந்த 4-ந்தேதி நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழு கூட்டத்தில் வேலை ஆட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட் கூறானது முன் வைக்கப்பட்டது. பின்னர் அது குழுவில் உறுப்பினர்களால் ஒத்தகருத்துடன் ஏற்கப்பட்டது.

எனவே அரசு மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.



தமிழகத்தில் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்திலும் அமர முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் கடைகளில் பணிபுரியும் இளம்வயது ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களது பணி நேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர்கள் பல்வேறு உடல் உபாதைகளையும் சந்தித்து வந்தனர். குறிப்பாக கால் வலியால் அவதிப்படும் நிலை ஏற்பட்டு இருந்தது. இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இது தொழிலாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Tags:    

Similar News