செய்திகள்
தமிழக சட்டசபை

தமிழகத்தில் இத்தனை கோடி கோவில் சொத்துகள் மீட்பா? - அரசு முக்கியத் தகவல்

Published On 2021-09-04 09:47 GMT   |   Update On 2021-09-04 10:03 GMT
மூன்று திருக்கோவில்களுக்கு சொந்தமான 11.12 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய நிலங்களின் பதிவுகள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ள தகவல்களோடு ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு கொள்கை விளக்க குறிப்பை வெளியிட்டார். அதில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் பல்வேறு பணிகள் பற்றியும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி, அன்னை தமிழில் அர்ச்சனை, மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் பற்றிய பணிகள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

கோவில்களை பாதுகாப்பது, தூய்மையாக வைத்திருப்பது, பணியாளர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு கோவில் நிலங்களை ஆக்கிரமித்தது பற்றியும், அது தொடர்பாக மீட்கப்பட்ட நிலங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு நிலங்கள் நில உடைமை பதிவு மேம்பாட்டுத் திட்ட செயலாக்கத்தின் போது தனிப்பட்ட நபர்களின் பெயரில் தவறாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையை அதை மாற்றி, மீண்டும் அந்தந்த கோவில்களின் பெயரிலேயே பட்டா பெறுவதற்காக மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய அரசு அமைந்த பிறகு தனியார் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட 60 திருக்கோவில்களுக்கு சொந்தமான 301.44 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் 7-5-2021 முதல் 15-8-2021 வரையிலான காலக்கட்டத்தில் திருக்கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு, மீண்டும் சம்பந்தப்பட்ட திருக்கோவில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மூன்று திருக்கோவில்களுக்கு சொந்தமான 11.12 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கிய நிலங்களின் பதிவுகள் கணினியில் பதிவேற்றப்பட்டுள்ள தகவல்களோடு ஒத்திசைவு செய்யப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மிகப்பெரும் நில வளங்களை சிறப்பாக நிர்வகித்திடவும், தனியார் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலங்களை கண்டறிந்து மீட்டு எடுக்கவும், வருவாய்த் துறையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றவும் தொகுப்பூதிய அடிப்படையில் 8 ஓய்வு பெற்ற துணை ஆட்சியர்கள், 20 ஓய்வு பெற்ற வட்டாட்சியர்கள், 17 ஓய்வு பெற்ற நில அளவையர்கள், 3 ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் 9 ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த அரசு அமைந்த பிறகு 203.00 ஏக்கர் அளவிலான வேளாண் நிலங்களும், 170.20 கிரவுண்டு அளவிலான காலி மனைகளும், 1.81 கிரவுண்டு பரப்பிலான கட்டிடங்களும் மற்றும் 15.59 கிரவுண்டு அளவிலான திருக்கோவில் குளக்கரை பகுதிகளும் மீட்டெடுக்கப்பட்டு, அந்தந்த திருக்கோவில்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட சொத்துக்களின் மதிப்பு ரூ. 641.01 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டாக திருக்கோவில்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அவ்விடங்களை தங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாற்றிக் கொண்டு, நீண்ட காலமாக தொடர்ந்து வசித்து வருபவர்களை திருக்கோவில் வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News