செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

அரசு பெண்கள் கல்லூரியில் 2-ம் ஆண்டு மாணவிக்கு கொரோனா தொற்று

Published On 2021-09-04 06:20 GMT   |   Update On 2021-09-04 06:20 GMT
கல்லூரி திறக்கப்பட்டு 4 நாட்களிலேயே மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகளின் பெற்றோரிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:

தஞ்சையில் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் கல்லூரி திறக்கப்பட்டதையடுத்து தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளங்கலை, முதுகலை 2-ம் ஆண்டு 3-ம் ஆண்டு மாணவிகள் பெரும்பாலோனோர் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். மேலும் முதலாமாண்டு மாணவிகள் சேர்க்கையும் மும்முரமாக நடந்து வருகிறது.

கல்லூரி திறக்கப்பட்டதையடுத்து கொரோனா தடுப்பூசி போடாத மாணவிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கல்லூரி வளாகத்திலேயே தடுப்பூசி போட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும் கடந்த 1-ந்தேதி கல்லூரி திறந்தபோது கல்லூரிக்கு வந்த மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதில் 958 மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் அக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படிக்கும் தஞ்சை பகுதியை சேர்ந்த மாணவிக்கு நேற்று வந்த கொரோனா பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த மாணவி இன்று கல்லூரிக்கு வராமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். இதுபற்றி தகவலறிந்த கல்லூரி நிர்வாகம் இத்தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு தெரிவித்தனர்.

அவர் உடனடியாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் சுகாதார துறையினர் மூலம் மாணவியின் வீட்டை கண்டறிந்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும் அந்த மாணவியின் பெற்றோரை கொரோனா பரிசோதனைக்காக அருகில் சுகாதார மையத்துக்கு மாநகராட்சி அலுவலர்கள் அனுப்பி வைத்து அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டதையடுத்து குந்தவை நாச்சியார் கல்லூரி முதல்வர் சிந்தியாதேவி பிகாம் 2-ம் ஆண்டு மாணவிகள் யாரும் மறுஉத்தரவு வரும் வரை கல்லூரிக்கு வரவேண்டாம். வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் அந்த மாணவி அமர்ந்திருந்த வகுப்பறை கிருமிநாசினி தெளித்து தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மற்ற மாணவிகள் இத்தகவலை அறிந்து பலரும் அச்சத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

கல்லூரி திறக்கப்பட்டு 4 நாட்களிலேயே மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோரிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News